Round Table India
You Are Reading
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சமூக நீதியை அழித்தொழித்து விடும் – முனைவர். தொல். திருமாவளவன்
0
Features

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சமூக நீதியை அழித்தொழித்து விடும் – முனைவர். தொல். திருமாவளவன்

thiruma suresh

 

Suresh R V 

பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு குறித்து முனைவர். தொல். திருமாவளவன், எம்.பி அவர்களுடனான ஒரு உரையாடல். 

இந்த உரையாடல் 3.5.2019 அன்று  நிகழ்ந்தது., அதாவது, மதிப்பிற்குரிய முனைவர்.தொல் திருமாவளவன் அவர்கள் எம்.பி. ஆக தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு முன்பாக நடந்தது. எங்களுக்கு இந்த வாய்ப்பினை தந்ததற்கு நன்றிகளையும், தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கு எங்களது வாழ்த்துகளையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

thiruma suresh

முதலும் முதன்மையுமாக, பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் இந்த 103ஆம் சட்டத் திருத்தம்  குறித்த தங்களின் பார்வை என்ன? 

10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு என்கிறப் பொருளில் பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அடிப்படையிலே உண்மைதான் என்றாலும் கூட இந்த இடஒதுகீடுக்கான மிக முக்கியமான அடிப்படையாக இருப்பது பொருளாதார அளவுகோல். உயர் சாதி என்கின்ற வரையறை என்பதைவிட பொருளாதார அளவுகோல் என்கின்ற வரையறை தான் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதாவது சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதுதான் இவ்வளவு காலம் நடைமுறையில் இருந்துக்கொண்டு வருகிறது. அதிலே பொருளாதாரம் என்பது ஒரு அளவுகோலாக கருதப்படவில்லை. சமூக தகுதி, பிறப்பின் அடிப்படையிலான ஒரு அணுகுமுறை போன்றவற்றால் சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற அனைத்துத் தளங்களிலும் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கங்களினால் பாதிக்கப்பட்ட பிரிவினர் யார்யாரென்று அடையாளம் காட்டப்பெற்று, அவர்களுக்கு நீதி வழங்கக்கூடிய வகையிலான ஒரு அணுகுமுறையைக் கொண்டதுதான் சமூகநீதிக் கோட்பாடு. அப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளானவர்கள் அனைத்துத் தளங்களிலும் வலிமைப்பெற வேண்டும் என்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் போன்றவற்றை நுகர்வதில் அவர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பதாகும். 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்கின்ற கோரிக்கை நீண்டக்காலமாக இருந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தக் காலத்தில் இருந்து இக்கருத்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதே காலக்கட்டத்தில்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் நேரு அவர்களின் அமைச்சரவையிலே அமைச்சராக பதவி வகித்தார். அந்தக் காலக்கட்டத்தில் பொருளாதாரத்தை ஏன் அளவுகோலாக கொள்ளக்கூடாது என்ற விவாதம் விரிவாகவே நடந்தேறியிருக்கிறது. அன்றைய தலைவர்கள், பண்டிட் ஜவஹர்லால் நேரு, புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தேசிய அளவிலான தலைவர்கள் அவர்களின் சமகாலத்து தலைவர்கள், அரசியல்தளம் தாண்டி பிற தளங்களில் பணியாற்றியவர்கள், அறிவுஜீவிகள் அனைவருமே இதுகுறித்த ஒரு விரிவான விவாதத்தை, ஒரு ஆழமான விவாதத்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனாலும், இறுதியில் பொருளாதாரத்தை அளவுகோலாகக் கொள்ளக்கூடாது சமூகத்தகுதியை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு சமூகநீதி என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதுதான் உண்மையான ஜனநாயகமாக இருக்கமுடியும் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். அப்படிதான் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்திலே உறுதிப்படுத்தப்பட்டது. 

ஆனால், இன்று மோடி அரசு பொருளாதாரத்தை அளவுகோலாக வைத்து 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதை உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு என்ற வகையிலே விவாதத்தை திசை திருப்பி பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்ப்போர்  எல்லோரும் உயர்சாதிகளை எதிர்க்கிறார்கள், உயர் சாதியினருக்கான உரிமைகளை வழங்கக்கூடாது என்று எதிர்க்கிறார்கள் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். உயர் சாதியினர் என்று அழைக்கபடுகிறவர்கள் உயர்ந்த சமூகத்தகுதிப் பெற்றவர்கள் என்கின்ற அங்கீகாரம் அவர்களுக்குண்டு. பொருளாதார அடிப்படையிலே அவர்களுக்கு பின்னடைவு இருக்கிறது, இல்லை என்று நாம் மறுக்க முடியாது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் கூட அவர்கள் பின்தங்கி இருக்க ஏராளமான வாய்ப்புகள் உண்டு. பின்தங்கியும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் சமூகத்தகுதியே அனைத்துக் கதவுகளையும் திறக்கிறது. அது எந்த தளங்களாக இருந்தாலும் சரி. ஆகவே அவர்களுக்கு அடையவேண்டியவைகளை அடைவதிலே பெரிய இக்கட்டுக்கள், நெருக்கடிகள் இருப்பதில்லை. எனவே தான் சமூகத்தகுதி உள்ளவர்கள், சமூகத்தகுதி மறுக்கப்பட்டவர்கள் என்று இந்த இந்தியச் சமூகத்தை இரண்டாகப் பிரித்து சமூகத்தகுதி social status தான் இன்றைக்கு பலருக்கு, அது தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கலாம், மிகவும் பின்தங்கிய மக்களாகவும் இருக்கலாம், அவர்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு அதிகாரங்கள் நுகர்வு போன்றவற்றில் நீண்டகாலமாகவே பாதிப்பு நிகழ்ந்திருக்கிறது. எனவே அதை ஈடுக்கட்டுவதற்காகத்தான் சமூகத்தகுதியை அடிப்படையாகக்கொண்டு மறுக்கப்பட்ட உரிமைகள் அனைத்தையும் மீட்டு அளிப்பதற்காக இந்த சமூகநீதிக் கோட்பாடே உருவானது. பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தாலும் சாதியால் பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள், அல்லது தலித்துகள் மற்றும் பழங்குடிகள் என்று அவர்களை அவமதிக்கின்றப் போக்கு இங்கே தலை விரித்து ஆடுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும் சமூகத்தகுதியால் உயர்ந்தவர்கள் என்கிறபோது அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. 

ஆகவே, இந்த வேறுப்பாட்டை, இந்த முரண்பாட்டை, அடிப்படையாகக்கொண்டுதான் பொருளாதார அளவுகோல் என்பது ஏற்புடையதல்ல. சமூகத்தகுதியே ஏற்புடையது. அது தான் சமூகநீதி. அந்த சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை குழிதோண்டிப் புதைப்பதற்காகத்தான்  பொருளாதார அளவுகோலை இன்றைக்கு ஒரு சட்டமாக ஆக்கியிருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதைவிட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்ற அந்த இடஒதுக்கீட்டை மறைமுகமாக தடுக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும், அதை மெல்ல மெல்ல சிதைக்கவேண்டும் என்கின்ற நோக்கத்தோடுதான் உயர்சாதியினருக்கு என்ற பெயரால், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டுவந்திருக்கிறார்கள். எனவே, அவர்களின் நோக்கம் சமூகநீதியைக் குழி தோண்டி புதைப்பது தான். பொருளாதாரத்தை இடஒதுக்கீட்டுக்கு ஒரு அளவு கோலாகக் கொண்டால் அல்லது ஒரு அலகாகக் கொண்டால் காலப்போக்கிலே சமூகநீதிப் பற்றிய உரையாடலே அற்றுப்போய்விடும். சமூகநீதி மெல்ல மெல்ல அழிந்துவிடும். ஆக, சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை இதன்மூலம் மெல்ல அழித்துவிட முடியும் என்ற கணக்கில்தான் இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் உயர்சாதியினருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதைவிட, இந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்குப்பட்டு வரும் சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆகவேதான், நாம் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் ஒரு அலகாகக் கொள்ளக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். உயர்சாதியினருக்கு எதுவுமே செய்யக்கூடாது என்ற அடிப்படையிலே இந்தப் போராட்டத்தை பார்க்கக் கூடாது. அவர்களுக்கு எந்த வடிவத்திலும் அரசு உதவி செய்யட்டும். கடன் உதவி தரட்டும், அல்லது வேறெந்த வகையிலுமான உதவிகளை செய்வதற்கான வாய்ப்பை வழங்கட்டும். ஆனால், சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு கோட்பாட்டை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் பொருளாதாரத்தை ஒரு அளவுகோலாகக் கொண்டு சட்டம் கொண்டுவந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, அவர்களின் உள்நோக்கம் மிகவும் கண்டிக்கத்தக்கது. சமூகநீதியை அழித்தொழிக்கும் ஒரு பிற்போக்கான நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டுகிற வகையில்தான் அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். 

suresh thiruma

OBC களின் இடஒதுக்கீட்டில்உள்ள கிரீமி லேயர் குறித்த உங்கள் பார்வை என்ன? மேலும், பல அம்பேத்கரியவாதிகளின் கருத்து என்னவாக இருக்கிறதென்றால் இந்த சட்டதிருத்தம் என்பது SC/ST களின் இடஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் கொண்டுவருவதற்கான முதல்படி என்கிறார்கள். அதுகுறித்தும், தங்களின் பார்வை என்ன? 

கிரீமி லேயர் என்பதுதான் முதன்முதலில் அவர்கள் பொருளாதாரத்தை அளவுகோலாகக் கொண்ட இடஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்குக் கையாண்ட ஒரு யுக்தி. கிரீமி லேயர் என்பதை நாம் அனுமதித்ததால் தான் இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாக அவர்களுக்கு அமைந்துவிட்டது. இது OBCக்கு வழங்கப்படுவது அதனால் SC/STக்கு பாதிப்பு இல்லை என்கின்ற பார்வை தவறானது. SC/ST மக்களுக்கான சமூகநீதி பாதுகாப்பென்பது OBCக்கான பாதுகாப்பில் இருந்துதான் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற நிலை இங்கே உள்ளது. ஆகவே, OBCக்கு வழங்கப்படக் கூடிய இடஒதுக்கீடு பாதிக்கப்படுமேயானால் அதனால் SC/STக்கும் பாதிப்பு ஏற்படும். கிரீமி லேயர் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத் தோன்றும். ஆனால், மிகவும் உன்னிப்பாக கவனித்தால் தான் அவர்களின் சதித்திட்டத்தை புரிந்துக்கொள்ள முடியும். ஒரு சமூகத்திலே ஒரு தலைமுறையினரைத் தாண்டி அடுத்தடுத்த தலைமுறையினர் படிக்க வருகிறார்கள், வேலைவாய்ப்புக்கு வருகிறார்கள் என்கிறப்போது அவர்களும் இந்த இடஒதுக்கீட்டை அனுபவிக்க வேண்டுமா என்றக் கேள்வி எழுவது இயல்பானதுதான். SC/STக்கான போட்டிகளில் SC/STயை சார்ந்த மாணவர்கள் போட்டிப்போடுகிறார்கள், களம் காண்கிறார்கள். ஆகவே, அது பிறசமூகத்தை சார்ந்தவர்களின் உரிமையைப் பாதிப்பதில்லை. உள்ளப்படியே அவர்களில் முதல் தலைமுறை அடுத்து இரண்டாம் தலைமுறைப் படிக்கத் தொடங்கிவிட்டார்கள், மூன்றாம் தலைமுறைப் படிக்கத் தொடங்கிவிட்டார்கள், அப்பா நீதிபதியாக இருக்கிறார், அம்மா பேராசிரியராக இருக்கிறார். ஆகவே, அவர்களுக்கு மறுபடியும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புவதைவிட, அவர்களே தன்னியல்பாகப் பொதுப்போட்டிக்கு தங்களைக் கொண்டுச்சென்றுவிட வேண்டும். அப்படிக் கொண்டு சென்றுவிட்டால் கிரீமி லேயர் என்ற பேச்சுக்கே இடமில்லை. 

BC, MBC, SC, ST போன்ற சமூகங்களைச் சார்ந்த மாணவர்கள் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையை சார்ந்தவர்களாக இருப்பார்களேயானால், அல்லது வசதிப்படைத்த குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பதனால் நன்றாக படிக்கக்கூடியவர்களாக இருப்பார்களேயானால் அவர்களைப் பொதுப்போட்டியிலே இணைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இணைக்க முடியாது, அவர்களை SC/ST இல் தான் இணைப்போம் அல்லது MBCகுள்ளே தான் இணைப்போம் என்கிறப் பிடிவாதம் செய்வதால்தான் இந்தக் கேள்வி எழுகிறது. அதாவது, ஏன் ஒரே சமூகத்தில் குறப்பிட்ட சிலர் மட்டுமே தான் பயன்பெறுகிறார்கள் என்கிறக் கேள்வி. ஏற்கெனவே மெத்தப்படித்தவர்கள், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்போ பெறுவதற்கான போட்டித்தளங்களிலே இறங்குவார்களேயானால், அவர்களை பொதுப்போட்டிக்கான களத்திலே இணைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இணைத்துக்கொண்டால் கிரீமி லேயர் என்ற விவாதமே தேவைப்படாது. இந்த ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பிறந்த மூன்றாவது, நான்காவது தலைமுறையினர் இந்த ஏழை எளிய தலித் மக்களின் உரிமைகளைப் பறித்துக்கொள்வார்கள் என்பதற்கான வாய்ப்பிருக்காது. எனவே, கிரீமி லேயர் என்பதை எப்படி அணுகுவது என்பதில் உள்ள பிரச்சனை தான் இது. ஆனால், ஆட்சி, அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், இதைக் காரணம் காட்டி தலித் மற்றும் இதர பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படுகிற இடஒதுக்கீட்டை மெல்ல மெல்ல சிதைக்கும் நோக்கத்தில் தான் பொருளாதாரத்தை ஒரு அளவுகோலாக கொண்ட அணுகுமுறையைக் கையாண்டு வருகிறார்கள். இது சமூகநீதிக்கு வைக்கின்ற வேட்டு. பெரும் ஆபத்து. ஆகவே, கிரீமி லேயர் என்ற முறையை விசிக ஏற்கவில்லை. ஒரு பொருளாதார அளவுகோலாக இது மாறக்கூடும், மாறும் என்பதனால் இதை நாங்கள் ஏற்கவில்லை. 

மத்தியிலே, முதலில் 50 சதவிகிதம் உச்சவரம்பு இருந்தது, இப்பொழுது 10 சதவிகித பொருளாதார இடஒதுக்கீட்டையும் சேர்த்து 60 சதவிகிதம் ஆக இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மாநில அளவிலே 69 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. மத்தியிலும், தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டுசெயல்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா? 

69 சதவிகித இடஒதுக்கீடு என்பது வேறு, மத்திய அரசு கையாளக்கூடிய இடஒதுக்கீட்டு சதவிகிதம் என்பது வேறு. இது இரண்டையும் போட்டு நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. மாநில அரசு தருகின்ற இடஒதுக்கீடு இங்குள்ள மக்கள்தொகை அடிப்படையில், மத்திய அரசு தரக்கூடிய இடஒதுக்கீடு என்பது தேசிய அளவிலான மக்கள்தொகை அடிப்படையில். மத்திய அளவில் 15 சதவிகிதம் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, 7.5 சதவிகிதம் தான் பழங்குடியின மக்களுக்கு, ஆக, மொத்தம் 22.5 சதவிகிதம் தான் SC/ST இடஒதுக்கீட்டால் வழங்கப்படுகிறது. OBC அல்லது பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் வழங்கப்படுகிறது. 50 சதவிகிதத்தை இடஒதுக்கீடு தாண்டக்கூடாது என்கிற உச்சவரம்பு உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் தான். ஏனென்றால் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு 22.5 சதவிகிதம். ஆனால் உண்மையில் மக்கள்தொகை இதைவிட பன்மடங்குப் பெருகிவிட்டது. 22.5 சதவிகிதத்தைவிட கூடுதலாக தலித் மற்றும் பழங்குடியின மக்கள் இருக்கிறார்கள். 15 சதவிகிதத்தை விட தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பதுக் கூடியிருக்கிறது. ஆனாலும், பழைய நிலையை தான் இன்றும் அவர்கள் கடைபிடிக்கிறார்கள். இதுவே, கண்டிக்கத்தக்கது, இது ஒரு ஏமாற்று நடவடிக்கை. 

இந்த நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில் 50 சதவிகித உச்சவரம்பை தாண்டக்கூடாது, அதேநேரத்தில் 69 சதவிகிதம் நடைமுறைக்கு வர வேண்டும். இதற்காக, நாடு முழுவதும் அதற்குப் போராட்டம் நடத்தப்பெற்று மத்திய அரசும் அதற்கு உடன்பட்டு 22.5 சதவிகிதத்தை பாதிப்படைய செய்யாமல் இதனை நடைமுறைப்படுத்துவது என்கின்ற வகையில் சில முயற்சிகளை அவ்வப்போது மேற்கொண்டது. மாநில அரசு 50ஐ தாண்டக்கூடாது என்கிற நிலையில் 19 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு, 19 மற்றும் 50 சதவிகிதம், ஆகமொத்தம் 69 சதவிகிதம் ஆக்கப்பட்டது. இதை 50 சதவிகிதமாக குறைக்கமுடியாது. SC/ST மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையில் கை வைக்க முடியாது. இந்த 50 சதவிகிதத்திலும் கைவைப்பது கடினமானது. எனவே, எட்டாவது அட்டவணையிலே இதை இணைக்கவேண்டும் என்று அட்டவணையிலே இணைக்கப்பெற்று இது பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, 69 சதவிகிதம் சிக்கலில்லாமல் SC/ST/OBC மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்தக் குறிப்பிட்டப் பட்டியலில் இணைக்கப்பெற்று பாதுக்காக்கப்பட்டு வருகிறது. எனவே, மத்திய அரசுக்கான இடஒதுக்கீட்டின் அளவு என்பது வேறு, மாநில அரசுக்கான இடஒதுக்கீட்டின் அளவு என்பது வேறு. இந்த இரண்டையுமே நாம் பாதுகாக்க வேண்டும் என்பதையும் தாண்டி, உச்சவரம்பை தகர்த்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு மக்கள்தொகை அடிப்படையிலே இடஒதுக்கீடு வழங்க முன் வர வேண்டும். அது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை. அது தான் இன்று பல்வேறு கட்சிகளின் கோரிக்கை. எனவே, அந்த உச்சவரம்பு உச்சநீதிமன்றம் விதித்தது என்றாலும்கூட அது மாற்றப்பட வேண்டும், மக்கள்தொகை அடிப்படையில் உரிய இடஒதுக்கீட்டை sc/st பெறுவதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்பதுதான் விசிகவின் வேண்டுகோள். 

இடஒதுக்கீடு கொள்கையானது சரி வர எந்த நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற பல அம்பேத்கரிய செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டைப் பற்றிய உங்களின் பார்வை என்ன? மத்திய மற்றும் மாநில நிறுவனங்களில் இடஒதுக்கீடு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? தலித்-பகுஜன்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா? 

எந்தக் காலத்திலுமே இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது ஒரு ஏமாற்று நடவடிக்கை என்று தான் நான் நம்புகிறேன். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கும் சரி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சரி இடஒதுக்கீடு என்பது 100 விழுக்காடு நடைமுறைப்படுத்தப்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்களை பொருத்தவரையில், அதற்கு தகுதியான மாணவர்கள் இல்லை என்ற காரணத்தையே அவர்கள் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அது ஏற்புடையதாக இல்லை. 5 அல்லது 6 சதவிகிதம் என்ற அளவில் தான்  இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதிலும், அதிகாரமில்லாத கடை நிலை பணியாளர்கள் பதவிக்குத் தான் இதைப் பெரிய அளவிலே பயன்படுத்துகிறார்கள். எனவே, நடைமுறையில் 5 அல்லது 6 சதவிகிதம் மட்டுமே உள்ளதென்கின்ற பொழுது இதை நூறு விழுக்காடு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 22.5 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் என எல்லாத்துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் இவர்கள் மீட்சிப் பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இதை இன்றைக்கு யாரும் பெரிதாக வலியுறுத்துவதில்லை. ஆட்சியாளர்கள் இதையும் காலிசெய்துவிட வேண்டும், குறிப்பாக சங்க்பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் இந்த இடஒதுக்கீடுக்கூட இருக்கக் கூடாது, அதை அழித்தொழிக்க வேண்டும் என்பதிலே கவனமாக இருந்து வருகிறார்கள். சமூகநீதியை காப்பாற்றுவதற்கே ஒவ்வொரு நாளும் நாம் போராட வேண்டியிருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை. 

சமீப காலமாகவே, பார்ப்பனிய கருத்தாக்கங்களின்படி பொதுப்பிரிவு என்பது உயர்சாதியினருக்காக தான் என்பதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த 50 சதவிகிதத்தையும் உய்ரசாதியினருக்கே உரித்தாக்குகிற சதித்திட்டமாக இந்த சட்டத்திருத்தத்தை காண்கிறீர்களா? 

இதில் திட்டம் என்றெல்லாம் எதுவுமில்லை. இதை வெளிப்படையாகவே அவர்கள் செய்கிறார்கள். மிச்சமிருக்கிற 50 சதவிகிதம் உயர்சாதியினருக்குதான் என்பது நடைமுறையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்று. இடஒதுக்கீடுப் பெற கூடிய சமூகங்களுக்கு அவரவர்களுக்கு என்ன ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அதில் முழுமையாக பயன்பெற முடியாத நிலையும் ஒருபுறம் இருக்கிறது. கேட்டால், தகுதியுள்ளர்வர்கள் இல்லை என்ற காரணத்தை அவர்கள் சொல்லுகிறார்கள். பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது. அதனால், அதிகாரம் உள்ள பதவிகளில் General Category என்று சொல்லக்கூடிய உயர் சமூகத்தினரை சார்ந்தவர்கள் தான், உயர்சாதி என்ற அடையாளம் கொண்டவர்கள்தான், நுகர்ந்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை மிக சொற்பமானது, ஆனால், அவர்கள் நுகரும் அதிகாரம் 50 விழுக்காட்டுக்கும் மேலானது. அதிலும் இடஒதுக்கீடு பெறக் கூடிய சமூகங்களை சார்ந்தவர்களுக்கான வாய்ப்பையும் இந்த பொதுப்பிரிவினர் அல்லது உயர் சாதியினர் என்றுக் கருதப்படக் கூடியவர்களே நுகர்ந்துக்கொண்டு வருகிறார்கள் என்பதே யதார்த்தமான உண்மை. இதை, சமூகநீதி காப்பாற்றப்பட வேண்டும் என்று துடிக்கக்கூடிய ஒவ்வொருவரும் புரிந்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்களை பொதுப்பிரிவினருக்கான பிரிவுக்கு அனுப்புவதென்ற முயற்சியில் ஈடுபட வேண்டும். அது முக்கியமானது. இடஒதுக்கீட்டு பிரிவைச் சார்ந்த மாணவர்கள் பொதுப்பிரிவில் போட்டியிடக்கூடிய தகுதியைப் பெறுகிறப்போது பொதுப்பிரிவை சார்ந்தவர்களாக தான் கருதப்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் 50 விழுக்காடும் ஒரே உயர் சாதி வகுப்பினருக்கு என்ற நிலை மாறும். உண்மையான சமூகநீதிப் பாதுகாக்கப்படும். 

மத்திய அரசானது தொடர்ந்து பகுஜன் மக்களுக்கும், மாநிலங்களுக்கும் எதிரான சட்டதிட்டங்களையே கொண்டுவருகின்றது. உதாரணத்திற்கு, நீட், GST போன்ற திட்டங்கள். இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் மாநிலங்களின் குரல் நசுக்கப்படுகிறது என்று கருதுகிறீர்களா? இதில் ஒரு மத்திய அரசு VS மாநில அரசு என்றக் கோணம் இருப்பதாக கருதுகிறீர்களா? 

இதில் உயர்சாதி மற்றும் பிறசாதி அணுகுமுறை உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல மத்திய அரசு மற்றும் பிராந்திய அரசு என்ற அணுகுமுறை மத்தியிலே ஆள்வோர்க்கு  உள்ளது. பிராந்திய கட்சிகள் அல்லது மாநில கட்சிகள் வலுப்பெற்றுவிட கூடாது. மாநிலங்களில் மாநிலக்கட்சிகளின் அரசு அமைவது மத்திய அரசை பலவீனப்படுத்துவதாக அமைகிறது. எனவே வலுவான மைய அரசு என்பதுதான் அவர்களின் நோக்கம். வலுவான மைய அரசு என்பதை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால் ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே ஆட்சி என்கின்ற அடிப்படையிலே அதை அணுகுகிறார்கள். எனவே, மாநில உரிமைகளை நசுக்குவது, பிராந்திய உணர்வுகளை நசுக்குவது, மாநிலக் கட்சிகளே இனி இருக்கக்கூடாது என்ற நிலைக்கு அரசியல்தளத்தில் ஒரு சூழலை உருவாக்குவது, இதெல்லாம் அவர்களின் செயல்திட்டங்களில் முக்கியமானவை. உயர் சாதியினர் மற்றும் பிற சாதியினர் என்கிற முரண்பாட்டைக் கூர்மைப்படுத்துவதைப் போல வலுவான மைய அரசு பலவீனமான மாநில அரசுகள், மெல்லமெல்ல மாநில அரசுகளை சிதைத்துவிடுவது அல்லது தேசியக்கட்சிகளின் மாநில அரசுகளை அமைப்பது. போன்றவைதான் அவர்களின் நோக்கம். அதனால் பல மாநில விரோத சட்டதிட்டங்களை அவர்கள் கொண்டு வருகிறார்கள். அதை மாநில விரோதம் என்பதை விட பிராந்திய உணர்வுகளுக்கு எதிரான ஒரு அணுகுமுறையை அவர்கள் கையாளுகிறார்கள். காலப்போக்கில் மாநில கட்சிகளே இல்லாத நிலையைக் கொண்டுவர வேண்டும், உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. 

காங்கிரஸ் கட்சி தான் 2006 இல் இந்த சட்டதுக்கான கமிஷன் ஒன்றை நியமித்தார்கள். பாராளுமன்றத்திலும் இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாகளித்தார்கள். அதிமுக அடையாளத்திற்கு எதிர்த்துவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டார்கள். நம் பகுஜன்களின் நலன்களை பாதுகாக்ககூடிய கட்சியாக விளங்கும் பிஎஸ்பி கூட இதற்கு ஆதரவாக தான் வாக்களித்தார்கள். சிபிஐஎம் கூட எதிர்த்தாலும், ஆதரவாக தான் வாக்களித்தார்கள். இதுக் குறித்தெல்லாம் உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது? 

இது உள்ளப்படியே இருக்கக்கூடிய கசப்பான உண்மை. ஒருமித்த கருத்து ஜனநாயக சக்திகளுக்கு இடையிலே உருவாகவில்லை. உருவாக வேண்டும். அதற்கேற்ப நம்மைப்போன்றவர்கள் எல்லாம் சேர்ந்துப் பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஆகவே, இந்த கசப்பையும் நாம் கடந்து, ஜனநாயகத்தையும் வென்றெடுக்க வேண்டும்.  

சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த உங்கள் பார்வை என்ன? இந்த பிரச்சனைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? ஏன் அதுகுறித்த ஒரு விரிவான உரையாடல் தமிழகத்திலே நிகழவில்லை? 

சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது முழுமையான சமூகநீதிக்காக தேவைப்படுகிறது. சாதியை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்லுகிற அதேவேளையில் சாதியை ஒழிப்பதற்கு சமூகநீதி என்பது முன் நிபந்தனையாக இருக்கிறது. சமூகநீதியை முறைப்படி நடைமுறைபடுத்துவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாக இருக்கிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு தேவைதான் என்று விசிக வலியுறுத்துகிறது. இதைப்பற்றிய உரையாடல்கள் பெரிய அளவிலே இங்கு நிகழவில்லை. அது நிகழவேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும். 

நீதிமன்றங்களில் முழுக்க பார்ப்பன-உயர் சாதியினரின் ஆதிக்கமே இருக்கிறது? அங்கு இருக்கும் collegium (உயர்மட்ட குழு ) முறையிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக. நீதிமன்றங்களில், பல்கலைக்கழகங்களில், உயர்கல்வி நிறுவனங்களில், ராணுவம் மற்றும் காவல்துறைப் போன்ற பாதுகாப்புத்துறைகளில் இடஒதுக்கீடு என்பது அவசியம் தேவை. அதற்காகத்தான் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அது வந்தால், ராணுவம் உள்ளிட்ட உச்சநீதிமன்றம் போன்ற அனைத்துத்துறைகளிலும் இடஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு வந்துவிடும், ஜனநாயகமும் பாதுகாக்கப்படும். 

விசிக இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறது. பெரும்பாலும் உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றங்களின் மூலம் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று கருதுகிறீர்களா? 

அது ஒரு எதிர்ப்பின் அடையாளம் தான், நீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்திருப்பது. எல்லா நேரங்களிலும், நமக்கு எதிராக தீர்ப்பளித்து விட்டார்கள் என்று சொல்லமுடியாது. பெரும்பாலான நேரங்களில், தீர்ப்புகள் எதிராக வந்திருக்கலாம். ஆனால், சிலசமயங்களில், நம்முடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடிய வகையில் சில ஜனநாயக சக்திகள், நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். எனவே, இந்த வழக்கிலும் அப்படி ஒரு அதிய அற்புதம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நேர்மையானவர்கள், ஜனநாயக சக்திகளானவர்கள், நமக்கு சாதகமான, அல்லது நாம் வைக்கக்கூடிய நியாயமானக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று நான் நம்புகிறேன். 

ஆக, அற்புதம் தான் நிகழ வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா? 

அந்த மாதிரி எப்போதாவது நடந்தால் அதற்குபெயர் அற்புதம். பலநேரங்களில், அப்படி அமைந்திருக்கிறது. ஏனென்றால், நீதிபதிகள் அத்தனைப் பேருமே, ஒரேமாதிரி எதிராக இருந்துள்ளார்கள் என்று சொல்லமுடியாது. அல்லது அதிகாரிகள் அத்தனைப் பேருமே எதிராக இருந்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. எவ்வளவோ ஜனநாயக சக்திகள் இருக்கிறார்கள். வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்றவர்கள்கூட உச்சநீதிமன்றத்திலே, ஒரு ஐயர் சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும்கூட, ஜனநாயகத்தின் பக்கம் நின்று பல தீர்ப்புக்களை  வழங்கியிருக்கிறார். அதே போல, உயர்நீதிமன்றத்திலே, நீதிபதி சந்துரு போன்றவர்கள் ஜனநாயகத்தின் பக்கம் நின்று நல்ல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். நம்முடைய உச்சநீதிமன்றத்தில் இன்றைக்கும்கூட அப்படி சிலநேரங்களில், நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில், பல நல்ல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். எனவே, அப்படி ஒரு சூழல் அமையும் என்கின்ற நம்பிக்கையில் தான் வழக்குத் தொடுத்து இருக்கிறோம். 

விசிக இதை வெறும் சட்டரீதியாக மட்டுமே எதிர்கொள்ளப் போகிறதா இல்லை சமூக-அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளப் போகிறதா? எப்படி இந்தப் போராட்டத்தை தாங்கள் முன்னெடுத்துச் செல்லப்போகிறீர்கள்? 

இது எல்லாத்தளங்களிலும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இதில் உயர்சாதியினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்கிற மாதிரியான ஒரு தோற்றத்தைக் கொடுக்கக்கூடாது. இது உயர்சாதியினருக்காக செய்திருந்தாலும்கூட உயர்சாதியினர் பயன்பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இது கொண்டுவரப்படவில்லை. அடித்தட்டு மக்கள் பயன்பெற்று வருகின்ற சமூகநீதியை அழித்தொழிப்பதற்காக கொண்டுவந்திருக்கிறார்கள். எனவே, சமூகநீதியைக் காப்பபாற்ற வேண்டும் என்றால் இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இதை, சட்டப்பூர்வமாக அணுகவேண்டிய தேவை இருக்கிறது, சமூகம், பொருளாதாரம், பண்பாடு  போன்ற தளங்களிலும் விரிவான விவாதத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அப்படித்தான் விடுதலை சிறுத்தைகள் இந்தப் பிரச்சனையை அணுகுகிறோம், அதைக் கொண்டுசெல்லவும் திட்டமிட்டு இருக்கிறோம். 

நீங்கள் சமீபத்தில் நடத்திய தேசம் காப்போம் மாநாட்டில் இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக குரல் எழுப்பினீர்களா? நாம் தேசத்தை காக்க வேண்டும் என்கிறீர்கள். ஆகையால், இந்த மசோதாவானது ஒட்டுமொத்த தேசத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கிறது என்றுக் கருதுகிறீர்களா? 

தேசம் காப்போம் மாநாட்டில் இந்த 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது சமூகநீதியை அழித்தொழிப்பதற்கான முயற்சி, எனவே அது ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதைத்தொடர்ந்து, வெகுமக்களிடத்திலே கொண்டுசெல்ல திட்டமிட்டிருக்கிறோம். இது தொடருமேயானால், காலப்போக்கிலே சமூகநீதி என்கிறக் கோட்பாடு முற்றிலும் அழிதொழிக்கப்பட்டுவிடும். அதைப்பற்றிய விவாதமே இங்கு இருக்காது. எனவே அதை ரத்து செய்யவேண்டும் என்பதும், அது தொடர்பான விழிப்புணர்வை எல்லா தளங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளின் மிகமுக்கியமான நிலைப்பாடாகும். 

ஆனாலுமே, இங்கே தமிழகத்தில் இதுகுறித்து பெரும் அமைதியே நிலவுகிறது. பொதுச் சமூகம் முதற்கொண்டு அரசியல் கட்சிகள் வரையிலும் சரி, நீட், அனிதாவின் மரணம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களுக்காக வெகுண்டெழுந்து திரண்ட மக்கள் மிக முக்கியமான பிரச்சனையான இதற்கு ஏன் திரளவில்லை என்று நினைக்கிறீர்கள்? 

தமிழ்நாட்டிலாவது ஏதோ கொஞ்சம் எதிர்ப்புக்குரல் இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்புக்குரல் இல்லை. அதற்குக்காரணம், ஏற்கெனவே அங்குப் பலரும் சம்ஸ்கிருதமயம் ஆகியிருக்கிறார்கள். இந்துத்துவமயம் ஆகியிருக்கிறார்கள். சங் பரிவார் அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்கு சிக்கிக்கொண்டவர்களாகதான் பெரும்பாலான மாநிலங்களிலும், மாநிலக் கட்சிகளுமே கூட இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆகவே, இந்த பத்து சதவிகித இடஒதுக்கீடுக்கு பின்னால் இருக்கின்ற சூட்சமங்களைப் புரிந்துக் கொள்வதிலே அவர்களுக்கு சிக்கலிருக்கிறது. இது உயர்சாதியினருக்கானது என்கிறப் பார்வையே முதலில் தகர்க்கப்பட்டால்தான் இதனுடைய நுட்பத்தை புரிந்துக்கொள்ள முடியும். இது சமூகநீதிக்கு எதிரானது என்கிற அடிப்படையில் இதைப் புரிந்துக் கொள்ளவேண்டும். அதன்பிறகுதான், அது உயர்சாதியினருக்கானதா, இல்லை மற்றவர்களுக்கானதா என்றக் கேள்வி. அது சமூகநீதி என்பதற்கு எதிரானது என்பதை புரிந்துக்கொள்வதிலே சிலருக்கு சிக்கலிருக்கிறது. அதற்குக்காரணம் அவர்கள் சங் பரிவார் அமைப்புகளோடு கொண்டுவருகிற, கொண்டிருக்கிற உறவுதான் முக்கியக் காரணம். ஆனால், தமிழ்நாட்டைப் பொருத்தவரைப் பெரியார் அம்பேத்கார் இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு அது தெளிவாகப் புரிகின்ற காரணத்தினால், இடதுசாரிகள் உட்பட, இதனைக் கடுமையாக நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். 

முன்பெல்லாம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் போது மக்கள் தெருவுக்கு வந்துப் போராடினார்கள். ஆனால், இந்த பிரச்சனைக்கு விசிகவும் சரி திமுகவும் சரி, வெறும் ஒரு வழக்கு மட்டுமே தொடுத்து அப்படியே நின்றுவிட்டார்களோ? பெரியார்திடலில் இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து ஒரு போராட்டம் நிகழ்ந்தது, அதில் விசிகவும் பங்கேற்றது. இப்பொழுதெல்லாம் நம் போராட்ட வடிவங்கள் மாறிவிட்டன என்று கருதுகிறீர்களா? 

இதை அப்படி நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஒருகாலத்தில் ஊடக வளர்ச்சி, ஊடக வலிமை என்பது குறைவாக இருந்தது. இன்றைக்கு நீங்கள் ஒரு மூலையில் அமர்ந்து ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால்கூட உலகம் முழுவதும், எல்லா மூலைமுடுக்குகளிலும் போய் சேர்ந்துவிடுகிறது. எனவே, லட்சக்கணக்கான மக்களை திரட்டி, பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் தான் அது போராட்டம், எண்ணிக்கை மிகவும் குறைவான அளவில் ஒரு போராட்டத்தில் பங்கேற்றால் அது நீர்த்துபோய்விட்டது என்பனப்போன்ற முடிவுக்கு வரக்கூடாது. எப்படியிருந்தாலும், எதிர்க்கவேண்டியவற்றை, உரிய நேரத்தில் எதிர்க்கவேண்டும் என்பதுதான் போராட்டத்தின் வடிவம். அது பத்து கட்சிகள் சேர்ந்துப் போராடுவதாக இருக்கலாம், அல்லது ஒரு கட்சி மட்டுமே போராடுவதாக இருக்கலாம். பத்தாயிரம் பேரை திரட்டிப் போராடுவதாக இருக்கலாம், அல்லது பத்துபேரை மட்டுமே வைத்துக்கொண்டுப் போராடுவதாக இருக்கலாம். ஆனால், போராட்டம் போராட்டம் தான். எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இது. எனவே, கடந்தக்காலங்களோடு தற்காலத்திய போராட்டங்களை ஒப்பிட தேவையில்லை என்பது என் கருத்து. 

இறுதியாக, நம் மக்களான SC/ST/OBC மக்களும், நம் இளம்தலைமுறையினரும், நம் பகுஜன் பொதுச்சமூகமும் இந்த பிரச்சனையை எப்படி முன்னெடுத்து செல்லவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

முதலில், இதுகுறித்து ஒரு விரிவான விவாதம் நடை பெற வேண்டும். அதிலே, நம் இளம்தலைமுறையினர் வெகுவாக பங்கேற்க வேண்டும். சமூகநீதி ஏதோ பரிதாபத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு வழங்கப்படுகிற சலுகை என்று பார்க்கக்கூடாது. அது நெடுங்காலமாக உரிமை மறுக்கப்படுகிறவர்களுக்கு வழங்கப்படுகிற சட்டப்பூர்வமான முன்னுரிமை என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே, சமூகநீதி தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் அல்லது உரையாடல்கள், இன்னும் விரிவாகத் தேவைப்படுகிறது. இது இளம்தலைமுறையினருக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்ற மிக முக்கியமான செய்தி. சமூகநீதியின் மீதான நம்பிக்கை வளர்ந்தால் தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். ஜனநாயகத்துக்கான Gateway, ஒரு நுழைவாயில், அல்லது ஒரு வாசல்படி தான் சமூகநீதி. அது அழிக்கப்பட்டுவிட்டால் மீண்டும் இங்கே சனாதனம் வெற்றிப்பெற்றுவிடும். இளம்தலைமுறையினர் மற்றும் பொதுச்சமூகம் என்பது தான் non-political mass (அரசியலுக்கு அப்பாற்பட்ட குழு ). அவர்கள் வந்து சமூகநீதி தொடர்பான விழிப்புணர்வை பெறுவதும், அதற்கான விரிவான உரையாடல்களை மேற்கொள்வதும், அந்த அடிப்படையில் ஜனநாயகத்தைக் காக்க அவர்கள் முன்வரவேண்டியதும், அவசியமானது என்றுக் கருதுகிறேன். அரசியல் கட்சிகள் அனைத்துமே மக்களுக்கு எதிராக செயல்படக்கூடியவர்கள் என்றப் பார்வையில் இருந்து விலகி செல்ல வேண்டும். அரசியல் கட்சிகளுக்கும் இதில் முக்கியமான பங்கு இருக்கிறது. வெகுஜன மக்களிடம் இதைக் கொண்டுப்போய் சேர்ப்பதிலே அவர்களின் பாத்திரம் மிகமுக்கியமானது என்பதைப் புரிந்துக்கொண்டு பகுஜன் பொது சமூகத்தைச் சார்ந்தவர்கள் அரசியல் கட்சிகளோடு இணக்கமாக இருந்து இந்தப் பிரச்சனையில் போராட வேண்டும். உயர்சாதியினருக்கு எதிரான போராட்டம் என்பதாக இதைக் கருதாமல், சமூகநீதியைப் பாதுக்காப்பதுக்கான போராட்டம், இடஒதுக்கீட்டை, பொருளாதார அளவுகோல் அடிப்படையில் கொண்டுவரக்கூடாது, சமூகநீதி அடிப்படையில் தான் அதைத் தொடர வேண்டும். அதற்கு உரிய ஒரு போராட்டம் இது என்றுப் புரிந்துக்கொள்ள வேண்டும். இதுவே, நான் விடுக்கின்ற வேண்டுகோள். 

ரவுண்டு டேபிள் இந்தியாவுக்காக முதல்முறையாக தங்களை சந்திக்கின்றோம்.  இந்த வாய்ப்பை வழங்கியதற்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். ரவுண்டு டேபிள் இந்தியாவுக்கு ஏதேனும் அறிவுரைகள் அல்லது கருத்துகள் கூற விரும்புகிறீர்களா? 

ரவுண்டு டேபிள் இந்தியா இணையத்தளத்திற்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக சக்திகளை அடையாளம் கண்டு, அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிற ஒரு ஜனநாயக இணையத்தளம் ரவுண்டு டேபிள் இந்தியா என்பதை நான் அறிவேன். குறிப்பாக புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற ஜனநாயக சிந்தனையாளர்களின் கருத்துக்களை அவர்களின் கொள்கை கோட்பாடுகளை விரிவான உரையாடலுக்கு இடம் தரக்கூடிய ஒரு இணையத்தளமாக இது விளங்கிக்கொண்டிருக்கிறது. இதில் ஏற்கெனவே பதிவான பல்வேறு விவாதங்கள் தொகுக்கப்பெற்று ஒரு சில நூல்களாக ஆங்கிலத்தில் வெளிவந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இன்று பல்வேறு செய்தி ஊடகங்கள், இணையத்தளங்கள் இயங்கினாலும் கூட, இப்படி ஆக்கப்பூர்வமான பணிகளை ரவுண்டு டேபிள் இந்தியா மேற்கொண்டிருப்பது இளம் தலைமுறையினருக்கு கூடுதலான இடம் அளிக்கக்கூடிய வகையில் பணியாற்றிக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது ஆகும். ரவுண்டு டேபிள் இந்தியாவுக்கு இந்த வாய்ப்பை வழங்கியமைக்காக என் நன்றியை உரித்தாக்குகிறேன். 

[கேள்விகளை தயாரித்தது சுரேஷ் ஆர்.வி, ராதிகா சுதாகர் ]

~~~

சுரேஷ் ஆர்.வி. சென்னையை சேர்ந்தவர். தான் ஒரு எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்

பட உதவி: போவநெர்ஜீஸ் கங்காபட்லா.